தேசிய நுகர்வோர் குறைதீர் ஆணையம்
இந்தியாவின் தேசிய நுகர்வோர் குறைதீர் ஆணையம்
(National Consumer
Disputes Redressal Commission – NCDRC) என்பது
நுகர்வோரின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கும், தேசிய அளவில் நுகர்வோர்
குறைகளுக்கு விரைவான மற்றும் பயனுள்ள தீர்வுகளை வழங்குவதற்கும் நுகர்வோர்
பாதுகாப்புச் சட்டம், 1986-இன் கீழ் 1988-ஆம் ஆண்டு
நிறுவப்பட்ட பகுதி நீதிசார் ஆணையமாகும். இதன் தலைமையகம் புதுதில்லியில்
அமைந்துள்ளது. இதன் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் தீர்ப்பாயங்கள்
(பணிவிதி நிபந்தனைகள்) விதிகள், 2021-இன் படி நியமிக்கப்படுகின்றனர்.
அமைப்பு
1. தலைவர்
(i) இந்திய உச்சநீதிமன்றத்தின்
பணியில் உள்ள அல்லது ஓய்வு பெற்ற நீதிபதி
அல்லது
(ii) உயர்நீதிமன்றத்தின்
பணியில் உள்ள அல்லது ஓய்வு பெற்ற தலைமை நீதிபதி.
2. உறுப்பினர்கள்
(குறைந்தபட்சம் 4 உறுப்பினர்கள்)
(i) உயர்நீதிமன்ற பணியில் உள்ள அல்லது
ஓய்வு பெற்ற நீதிபதி
அல்லது
(ii) மாவட்ட
நீதிபதி மற்றும் கூடுதல் மாவட்ட நீதிபதியாக மொத்தம் பத்து ஆண்டுகள் பணியாற்றியவர்
அல்லது
(iii) பொருளாதாரம், வணிகம், வர்த்தகம், சட்டம், நிதி, கணக்கியல், மேலாண்மை, தொழில், பொதுநல
விவகாரங்கள், நிர்வாகம்
அல்லது தேசிய நுகர்வோர் குறைதீர் ஆணையத்தின் பணிகளுக்கு பயனளிக்கும் ஏதேனும்
துறையில் குறைந்தபட்சம் இருபத்தைந்து ஆண்டுகள் சிறப்பு அறிவும் தொழில்முறை
அனுபவமும் கொண்ட திறமை, நேர்மை மற்றும் நற்பெயர் பெற்றவர்.
அதிகார
வரம்பு - ரூ.2 கோடிக்கு
மேற்பட்ட பணமதிப்புடைய வழக்குகள்
மேல்முறையீடு–இவ்வாணையத்தின்
ஆணைகளுக்கு எதிரான மேல்முறையீட்டை இந்திய உச்சநீதிமன்றத்தில் பதிவு செய்யலாம்.
இவ்வாணையத்தால்
வழங்கப்படும் நிவாரணங்கள்
தேசிய நுகர்வோர் குறைதீர் ஆணையம்,
நுகர்வோர்
பாதுகாப்புச் சட்டம், 2019-இன் கீழ், புகாரில் நியாயம் இருப்பதாகக்
கண்டறியப்பட்டால், நுகர்வோருக்கு முழுமையான நிவாரணங்களை வழங்க
அதிகாரம் பெற்றுள்ளது.
அதன்படி, பொருட்களில் உள்ள குறைபாடுகளை
நீக்க உத்தரவிடுதல், சேவைகளில் உள்ள குறைகளை சரிசெய்ய
உத்தரவிடுதல், குறைபாடுள்ள
பொருட்களை மாற்றித் தர உத்தரவிடுதல், செலுத்தப்பட்ட தொகையைத் திருப்பி
வழங்க உத்தரவிடுதல், நுகர்வோருக்கு ஏற்பட்ட இழப்பு, காயம்
அல்லது மனவேதனைக்காக இழப்பீடு வழங்குதல், நியாயமற்ற வணிக நடைமுறைகள் அல்லது
கட்டுப்படுத்தப்பட்ட வணிக நடைமுறைகளை நிறுத்த உத்தரவிடுதல், அபாயகரமான
பொருட்கள் அல்லது சேவைகளை விற்பனையிலிருந்து திரும்பப் பெற உத்தரவிடுதல், தவறாக
வழிநடத்தும் விளம்பரங்களை நிறுத்துதல் அல்லது மாற்றுதல் மற்றும் திருத்த விளம்பரங்களை
வெளியிட உத்தரவிடுதல், தேவையான இடங்களில் தண்டனை இழப்பீடு (Punitive
Damages) வழங்குதல், வழக்கு செலவினங்களை ஈடுசெய்ய
உத்தரவிடுதல் மற்றும் நுகர்வோரின் உரிமைகள் மற்றும் நலன்களைப் பாதுகாத்து நீதி
நிலைநாட்டுவதற்கு தேவையான பிற பொருத்தமான நிவாரணங்களையும் வழங்க அதிகாரம்
பெற்றுள்ளது.